Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

நியூயார்க் திருவிழாவில் கவனம் ஈர்த்த இந்திய உணவுகள்

நியூயார்க் திருவிழாவில் கவனம் ஈர்த்த இந்திய உணவுகள்

இந்திய வம்சாவளி சமையல் கலைஞர் மனீத் சவுகான், நியூயார்க்கின் புகழ்பெற்ற ‘செம்மா’ உணவகத்தின் சமையல் கலைஞர் விஜயகுமார் ஆகியோர் இதை நடத்தினர்

பகிரவும் WhatsApp Facebook

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறும் பிரபல உணவுத் திருவிழாவில், இந்தியாவின் பல்வேறு மாநில உணவுகளும் பாலிவுட் இசையும் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தன. முன்னணி சமையல் கலைஞர்கள் தயாரித்த உணவுகளை நூற்றுக்கணக்கானோர் ஆர்வத்துடன் சுவைத்தனர்.

நியூயார்க் ஒயின் மற்றும் உணவுத் திருவிழாவின் ஒரு பகுதியாக, ‘ஃபிளேவர்ஸ் ஆஃப் பாலிவுட்’ என்ற சிறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்திய வம்சாவளி சமையல் கலைஞர் மனீத் சவுகான், நியூயார்க்கின் புகழ்பெற்ற ‘செம்மா’ உணவகத்தின் சமையல் கலைஞர் விஜயகுமார் ஆகியோர் இதை நடத்தினர்.
தெற்காசியக் கலாச்சாரத்தைப் பரப்பும் ‘தி கல்ச்சர் ட்ரீ’ அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில், இந்தியப் பிராந்திய உணவுகள், தெருவோரச் சிற்றுண்டிகள், நவீன முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகள் பரிமாறப்பட்டன.

இட்லி, பட்டர் சிக்கன், மலாய் ஐஸ்கிரீம், பான் உள்ளிட்டவற்றைச் சுவைக்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சில அரங்குகளில் உணவுகள் முழுவதும் தீர்ந்துபோயின. வர்ஜீனியா, வாஷிங்டன் டிசி, பென்சில்வேனியா உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் உணவுப் பிரியர்கள் வந்திருந்தனர்.
இதுகுறித்து மனீத் சவுகான் கூறுகையில், ‘‘1998-ல் அமெரிக்காவுக்கு வந்தபோது இந்திய உணவுகளுக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருந்தன. தற்போது ஏற்பட்டுள்ள வளர்ச்சி வியப்பளிக்கிறது. இளம் சமையல் கலைஞர்கள் தாங்கள் வளர்ந்த சூழலின் உணவுகளையும் மூலப்பொருட்களையும் பெருமையுடன் அறிமுகப்படுத்துகின்றனர்’’ என்றார்.
‘‘இந்தியச் சமையலை வாழ்நாள் முழுவதும் கற்றாலும் அதன் ஒரு சிறு பகுதியைத்தான் அறிந்திருக்க முடியும். அந்த அளவுக்கு அதன் பன்முகத்தன்மை விரிந்துள்ளது’’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

போர்த்துக்கீசியர், பிரெஞ்சுக்காரர், சீனர், முகலாயர் ஆகியோரின் தாக்கங்களையும் இந்திய உணவுகளில் காணலாம் என்று அவர் தெரிவித்தார். ஒவ்வொரு பிராந்தியத்தின் தனித்துவமும் தற்போது கொண்டாடப்படுவதாகவும், ஒரு கலாச்சாரத்தை மதிப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்று அதன் உணவைச் சுவைப்பதுதான் என்றும் கூறினார்.
விஜயகுமார் கூறுகையில், ‘‘நியூயார்க் மட்டுமின்றி அமெரிக்கா முழுவதும் இந்திய உணவுகளுக்கு அங்கீகாரம் கிடைத்து வருகிறது. இது தொடக்கம்தான். இளம் சமையல் கலைஞர்கள் தங்களின் உண்மையான அடையாளத்தைப் பின்பற்ற வேண்டும்’’ என்றார்.

நிகழ்ச்சிக்கான அனைத்து அனுமதிச்சீட்டுகளும் விற்றுத்தீர்ந்தது இந்தியச் சமூகத்துக்குப் பெருமையளிப்பதாக ‘தி கல்ச்சர் ட்ரீ’ நிறுவனர் அனு சேகல் தெரிவித்தார்.
பிரபல இந்தியத் திரைப்படப் பாடல்கள் ஒலித்த பின்னணியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி, தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டங்களுக்கான தொடக்கமாகவும் அமைந்தது.
அக்டோபர் 15 முதல் 18 வரை நடைபெறும் 19-வது ஆண்டு உணவுத் திருவிழாவில் 500 சமையல் கலைஞர்கள் பங்கேற்கின்றனர். மொத்தம் 50-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

ஜுனூன், கப்ஷப், லோர் உள்ளிட்ட உணவகங்களின் சமையல் கலைஞர்களும் இந்திய உணவுகளின் தனித்துவத்தை வெளிப்படுத்தினர். இனிப்புகள் முதல் காரமான உணவுகள் வரை பலவகைச் சுவைகள் ஒரே இடத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. உணவுடன் இசையும் கலாச்சாரமும் இணைந்த இந்த நிகழ்வு பார்வையாளர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

முந்தைய செய்தி
சீனாவில் ஒரு ஸ்பைடர் மேன்: பறக்கும் பலகையை உருவாக்கி அசத்திய இளைஞர்
அடுத்த செய்தி
ஏடன் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்: உயிர் தப்பிய 151 பயணிகள்

தொடர்புடைய செய்திகள்